‘ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

 

*மர்ம முடிச்சுகளுடன் வெளியாகும் அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’! – நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!*

அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மதுமிதாவின் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe) வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

இதனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில்…

 

*நடிகை அனுபமா பேசியதாவது:*

“‘ஜான் டோ’ மிகவும் முக்கியமான, ஆழமான உளவியல் கதைக்களத்தைக் கொண்ட திரைப்படம். இந்தப் படத்தைப் பார்க்கத் திரையரங்கிற்குள் செல்லும்போது நீங்கள் ஒரு நபராக இருப்பீர்கள். ஆனால், படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது நிச்சயமாக இன்னொரு நபராக மாறியிருப்பீர்கள். அந்த அளவுக்கு இப்படம் உங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார்.

*நடிகர் படவா கோபி பேசியதாவது:*

“இந்தப் படத்தில் என்னுடைய குரலைப் பற்றிப் பேசுவதைவிட, இந்தப் படத்தின் குரலே அர்ஜுன் தாஸ் தான். அவருடைய ஆழமான குரல் தனித்துவமானது. நாங்கள் வாய்ஸ் ஓவர் பணிகளுக்குச் செல்லும்போதுகூட, ‘உங்கள் குரல் அர்ஜுன் தாஸ் மாதிரி இருக்க வேண்டும்’ என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு அவருடைய குரல் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் உண்மையிலேயே ஒரு திறமையான கலைஞர். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி.

இந்தப் படம் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு உளவியல் போராட்டம் இருக்கிறது. கமல் சார் சொன்னதுபோல, கடவுள் பாதி, மிருகம் பாதி என்பதுதான் மனிதர்களின் இயல்பு. அந்த மனநிலையைப் படத்தில் வித்தியாசமாக அணுகியிருக்கிறார்கள்.

இயக்குநர் மதுமிதா எனக்கு நீண்டகால குடும்ப நண்பர். 2018ஆம் ஆண்டு என் அம்மா இறந்த பிறகு நான் மிகுந்த மனவேதனையில் இருந்தேன். அப்போது என்னைத் தொடர்புகொண்டு கேரளாவுக்கு வந்து நடிக்கும்படி அழைத்தவர் மதுமிதா. அந்தக் காலகட்டத்தில் என்னை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவந்தவர் அவர். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுமிதா ஒரு சிறந்த இயக்குநர். அவருடைய படைப்பாற்றலும், நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வரும் விதமும் வியக்க வைக்கிறது. இந்தப் படத்தில் நான் நிறைய நகைச்சுவைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன். அர்ஜுன் தாஸின் நடிப்பு, அவருடைய உணர்வுபூர்வமான காட்சிகள் எனப் பல விஷயங்கள் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளன.

மேலும், இந்தப் படத்தில் அர்ச்சனா எனக்கு மனைவியாக நடித்திருக்கிறார். ஜாராவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய வளர்ச்சியைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மதுமிதா தேசிய அளவில் கவனம் ஈர்த்து வரும் நம் தமிழ் மண்ணின் பெண் என்பது நம் திரையுலகமே பெருமைப்பட வேண்டிய விஷயம்.

இந்தப் படத்தின் தலைப்பான ‘ஜான் டோ’ என்பதன் அர்த்தம் எனக்குத் தொடக்கத்தில் தெரியவில்லை. மருத்துவமனையில் அடையாளம் தெரியாத ஆண் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவரைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் பெயர்தான் ஜான் டோ; பெண் நோயாளியாக இருந்தால் ஜேன் டோ என்று குறிப்பிடுவார்கள் என்பதைப் பின்னர்தான் தெரிந்துகொண்டேன். அந்த அளவுக்கு வித்தியாசமான பெயரையும், கதைக்களத்தையும் கொண்ட இந்தப் படத்தில் வாய்ப்பு வழங்கிய மதுமிதாவுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி” என்றார்.

*நடிகை அர்ச்சனா பேசியதாவது:*

“இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. அதற்கான நடிப்பும் மிகவும் அழுத்தமானதாக இருந்தது. படத்தைப் பார்க்கும்போது முதல் ஒரு நிமிடத்திலேயே என்னுடைய கதாபாத்திரத்தின் தாக்கத்தை உணர்வீர்கள். அந்த அளவுக்கு ஒரு கனமான நடிப்பை வழங்கியிருக்கிறேன். ஒரு சிறிய கதாபாத்திரத்தைக்கூட மிகுந்த அழுத்தமும் தாக்கமும் கொண்டதாக மாற்ற முடியும் என்பதை மதுமிதா மூலம் கற்றுக்கொண்டேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்த மதுமிதாவுக்கு மனமார்ந்த நன்றி.

இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரின் கூட்டு முயற்சியால்தான் ‘ஜான் டோ’ உருவாகியுள்ளது.. உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அர்கா நிறுவனத்துக்கும், தயாரிப்பாளர்களுக்கும் வாழ்த்துகள். தமிழ் சினிமாவுக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ் திரையுலகில் நீங்கள் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும்” என்றார்.

*ஒளிப்பதிவாளர் பிரீதா ஜெயராமன் பேசியதாவது:*

“‘ஜான் டோ’ திரைப்படத்தில் ஒளிப்பதிவு ரீதியாக எங்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது நீருக்கடியில் படமாக்கிய காட்சிகள்தான். படத்தின் முக்கியமான ஒரு பகுதி நீருக்கடியில் நடைபெறுவதால், அதற்காக முன்கூட்டியே நிறைய திட்டமிட வேண்டியிருந்தது.

படத்தின் முன்தயாரிப்புப் பணிகளின்போதே காட்சிப் பிரிப்பு, காட்சிகளை மனதில் உருவகப்படுத்திப் பார்ப்பது (Pre-visualization) உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டோம். நீருக்கடியிலேயே நேரடியாகப் படப்பிடிப்பையும் நடத்தினோம். இதற்காகப் பயிற்சி பெற்ற ஸ்கூபா டைவர்களைப் பயன்படுத்தினோம். நடிகர்களுக்கும் அதற்கேற்ற பயிற்சியும், சூழலுக்குப் பழகுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இது சவாலான பணியாக இருந்தாலும், திட்டமிட்டபடி சிறப்பாகச் செய்து முடித்தோம்” என்றார்.

*படத்தொகுப்பாளர் விஜய் வெங்கடரமணன் பேசியதாவது:*

“படத்தொகுப்பு என்பது ஒரு வகையில் கதையை மீண்டும் எழுதுவதுதான் (Editing is rewriting). இயக்குநர் எழுதிய கதையைப் படத்தொகுப்பு மேசைக்கு வந்த பிறகு, காட்சிகளின் வரிசை, அதன் அமைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் மூலம் இன்னும் சிறப்பாக மாற்றியமைக்க முடியும்.

இயக்குநர் மதுமிதாவுடன் இணைந்து பணியாற்றி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. எங்களுக்குள் நல்ல புரிதல் இருப்பதால், அவர் எதைப் படமாக்குகிறார், எதற்காக அந்தக் காட்சியை எடுக்கிறார் என்பது எனக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும். அவர் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும்போதே நான் படத்தொகுப்புப் பணிகளைத் தொடங்கி, படத்தொகுக்கப்பட்ட காட்சிகளை அவருக்கு அனுப்பி வைப்பேன். இதனால் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே படம் எப்படி உருவாகிறது என்பதை அவரால் பார்க்க முடியும். அந்த அளவுக்கு எங்களுக்குள் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கிறது” என்றார்.

*ஆடை வடிவமைப்பாளர்கள் ப்ரியா கரண் மற்றும் ப்ரியா ஹரே பேசியதாவது:*

“‘ஜான் டோ’ திரைப்படத்தில் கதையின் மர்மத்தன்மையை அதிகரிக்கும் வகையிலும், சில விஷயங்களைப் பார்வையாளர்களிடமிருந்து மறைத்து வைக்கும் வகையிலும் ஆடைகளின் நிறங்கள் மற்றும் வடிவமைப்புகளைப் பயன்படுத்தியுள்ளோம். அதேபோல், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மனநிலையையும் அவர்களுடைய ஆடை வடிவமைப்பின் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்துள்ளோம்.

ஒரு திரைப்படத்தில் காஸ்ட்யூம்கள் தனியாகத் தெரியாமல், கதாபாத்திரங்களுடன் இயல்பாகப் பொருந்திவிட்டால் அதுவே சிறந்த ஆடை வடிவமைப்பு என்று நாங்கள் நம்புகிறோம். ஒவ்வொரு கலைஞரும் ஒரே காட்சியில் தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக ஆடைகளை வடிவமைக்காமல், கதையின் சூழலுக்கும் கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான வகையில் பணியாற்றியுள்ளோம். அந்த வகையில் ‘ஜான் டோ’ படத்தில் எங்களுடைய முயற்சி சிறப்பாக அமைந்திருக்கிறது என்று நம்புகிறோம்” என்றனர்.

*ஒலி வடிவமைப்பாளர் அதுல் கிருஷ்ணா பேசியதாவது:*

“இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கான அருமையான வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி. சிங்க் சவுண்ட் (Sync Sound) என்பது ஒரு நல்ல இயக்குநர், சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் இருந்தால் மிகவும் எளிதாகச் செயல்படுத்தக்கூடிய ஒலிப்பதிவு முறையாகும். படப்பிடிப்பின்போதே நடிகர்கள் பேசும் வசனங்களையும், அந்தச் சூழலில் இயல்பாக உருவாகும் ஒலிகளையும் நேரடியாகப் பதிவு செய்வதுதான் சிங்க் சவுண்ட் முறை.

இந்த முறையால் நடிகர்கள் தங்களுடைய வசனங்களிலும், கதாபாத்திரத்தின் உணர்வுகளிலும் முழுமையாகக் கவனம் செலுத்த முடியும். சிங்க் சவுண்ட் முறையில் படப்பிடிப்பு நடைபெறும்போது அரங்கம் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் இருக்கும். இது நடிகர்களுக்கு மட்டுமின்றி இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களுடைய பணிகளில் சிறப்பாகக் கவனம் செலுத்த உதவுகிறது.

‘மயக்கம் என்ன’ திரைப்படமும் சிங்க் சவுண்ட் முறையில் உருவான படம்தான். இந்த முறையில் பதிவு செய்யப்படுவதால் பார்வையாளர்கள் கதாபாத்திரங்களுடன் இன்னும் நெருக்கமாகத் தங்களை இணைத்துக்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். அனைத்து இயக்குநர்களும் சிங்க் சவுண்ட் முறையில் திரைப்படங்களை உருவாக்க முன்வந்தால், அது திரைப்படங்களுக்கும், டப்பிங் கலைஞர்களுக்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

தயாரிப்பு வடிவமைப்பாளர் அஷ்வினி காலே பேசியதாவது:

“‘ஜான் டோ’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்வதில் பல்வேறு சவால்களைச் சந்தித்தோம். குறிப்பாக, குட்டிக்கானம், பீர்மேடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் சுமார் 38 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தில் இடம்பெறும் ஒரு வீடு ஒரு மலையிலும், மற்றொரு வீடு வேறொரு மலையிலும், காவல் நிலையம் மற்றொரு மலையிலும் அமைந்திருந்தது. இதுபோன்ற இடங்களைச் சென்றடைவதும், அங்கு படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்வதும் மிகவும் சவாலாக இருந்தது.

அதுமட்டுமின்றி, தொடர்ந்து பெய்த மழையும் படப்பிடிப்புப் பணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், தயாரிப்புத் தரப்பினர் எங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து முழு ஆதரவு அளித்தனர். குறிப்பாக, கேரளாவைச் சேர்ந்த லைன் புரொடக்‌ஷன் பொறுப்பாளர் ராஜீவ் சார் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். படத்திற்குப் பொருத்தமான சிறந்த படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்து கொடுத்தார். விரைவில் திரையில் அந்த இடங்களைப் பார்வையாளர்கள் காணும்போது எங்களுடைய உழைப்பைப் புரிந்துகொள்வார்கள்” என்றார்.

*தயாரிப்பாளர் பிரசாத் பேசியதாவது:*

“மதுமிதாவிடமிருந்து எங்களுக்கு ஒரு அற்புதமான கதைக்களம் கிடைத்தது. இதுவரை நான் பணியாற்றிய இயக்குநர்களிலேயே மதுமிதா மிகவும் அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் பணியாற்றக்கூடியவர். அவர் ஒரு சிறப்பான திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் எங்கள் குழுவினருடன் இணைந்து படத்தைப் பார்த்தேன். எங்களுடைய நிறுவனத்தின் முதல் தமிழ்த் திரைப்படம் இது என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இது எங்களுடைய முதல் படமாக மட்டுமல்லாமல், தொடர்ந்து பல தமிழ்ப் படங்களைத் தயாரிப்பதற்கான தொடக்கமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தில் இணைந்ததற்காக அர்ஜுன் தாஸுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சந்துரு கதாபாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர் மிகச்சிறந்த நடிகர். இப்போது அவர் ஒரு திறமையான ராப் கலைஞராகவும் இருக்கிறார். படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. அவர்களைப் பற்றி இயக்குநர் மதுமிதாவே பேசுவார் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

எங்களுடைய கூட்டாளிகளான நெட்ஃபிளிக்ஸ்( ஓடிடி பங்குதாரர்), ஜீ தமிழ்(சாட்டிலைட் பங்குதாரர்), டிவோ மற்றும் இசைப் பங்குதாரர்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஏஜிஎஸ் (AGS) நிறுவனத்துக்கும், அர்ச்சனா, ஐஸ்வர்யா மற்றும் ஏஜிஎஸ் (AGS)  குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தைத் தெலுங்கில் தயாரிப்பதா அல்லது தமிழில் தயாரிப்பதா என்ற குழப்பம் ஆரம்பத்தில் எங்களுக்கு இருந்தது. எங்களுடைய பலம் தெலுங்குத் திரையுலகில் இருப்பதால் தெலுங்கில் தயாரிக்கலாம் என்று முதலில் நினைத்தோம். ஆனால், இந்தக் கதைக்கு மிகவும் அவசியமான உள்ளூர் கலாச்சாரப் பின்னணியும் இயல்புத்தன்மையும் தமிழில் படமாக்கும்போதுதான் சரியாக வெளிப்படும் என்பதை உணர்ந்தோம். அதே நேரத்தில் படத்தின் விநியோகம் குறித்த கவலையும் இருந்தது. ஏஜிஎஸ் (AGS) நிறுவனம் எங்களுடன் இணைந்ததால் இப்போது அந்தப் பொறுப்பு பாதுகாப்பான கைகளில் இருப்பதாக நம்புகிறேன். இத்தகைய மதிப்புமிக்க நிறுவனத்துடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

‘ஜான் டோ’ ஒரு சிறந்த திரைப்படம். நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

*குழந்தை நட்சத்திரம் நீரவ் பேசியதாவது:*

“‘ஜான் டோ’ படப்பிடிப்புத் தளத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இயக்குநர் மதுமிதா எனக்கு முழுமையான ஆதரவு கொடுத்தார். எப்படி நடிக்க வேண்டும் என்பதைப் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்து, மிகவும் சுதந்திரமாகவும் வசதியாகவும் நடிக்கச் வைத்தார். அதனால் படப்பிடிப்பில் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் ஜாலியாகப் பணியாற்ற முடிந்தது.

அர்ஜுன் தாஸ், ஜாரா, சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட திறமையான கலைஞர்களுடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆரம்பத்தில் அவர்களைப் பார்க்கும்போது கொஞ்சம் கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது. ஆனால் அனைவரும் என்னைச் சகஜமாகப் பழக வைத்தார்கள். இந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்” என்றார்.

*நடிகை ஜாரா பேசியதாவது:*

“ஒரு படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியும் முடிந்த பிறகு, நடிகர்களுக்கு இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களிடமிருந்து பாராட்டுகளும் கருத்துகளும் கிடைக்கும். ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றால், அதை எப்படிச் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதையும் இயக்குநர் எடுத்துச் சொல்வார். ஒரு காட்சி சிறப்பாக அமைந்திருந்தால் ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்வார்கள். அதேபோல், ஆடை வடிவமைப்பு மற்றும் கலை இயக்கம் ஆகியவை படத்தின் வண்ணங்கள், பின்னணி மற்றும் உணர்வுகளுக்கு ஏற்ப ஒன்றிணைந்து செயல்படும்.

ஆனால் இவை அனைத்தையும் தாண்டி, ஒரு திரைப்படத்திற்குக் கிடைக்க வேண்டிய மிக முக்கியமான அங்கீகாரம் பார்வையாளர்களிடமிருந்துதான் வர வேண்டும்.

குறிப்பாக, எங்களுடைய இயக்குநர் மதுமிதாவுக்கு அந்த அங்கீகாரத்தை வழங்கக்கூடியவர்கள் ரசிகர்களாகிய நீங்கள்தான். எனவே, நவம்பர் 13ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து ‘ஜான் டோ’ திரைப்படத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும். நாங்கள் அனைவரும் மிகுந்த உழைப்பைக் கொடுத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். உங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவழித்துப் பார்க்கும் அளவுக்கு இந்தப் படம் சிறப்பான திரையரங்க அனுபவத்தைத் தரும் என்று உண்மையாக நம்புகிறேன்” என்றார்.

*நடிகை ஸ்ருஷ்டி பேசியதாவது:*

“அனைவருக்கும் வணக்கம். எனக்குக் கொஞ்சம் தமிழ்தான் தெரியும் என்பதால் இங்கு பேசுவதற்கு மிகவும் பதற்றமாக இருக்கிறது. உண்மையில், நான் முதலில் கற்றுக்கொண்ட தமிழ் வார்த்தைகளே ‘தமிழ் தெரியாது’ என்பதுதான். ஆனால் இன்று உங்கள் அனைவருடனும் இந்த மகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்துகொள்வதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

தமிழ்நாட்டுடன் எனக்கு ஒரு சிறப்பான நினைவு இருக்கிறது. வீட்டை விட்டு வெகுதூரம் நான் முதன்முதலில் பயணம் செய்தது சென்னைக்குத்தான். முதன்முதலில் விமானத்தில் பயணம் செய்து டெல்லியை விட்டு வேறொரு நகரத்திற்கு வந்ததும் சென்னை தான். அதேபோல், முதன்முதலில் கடலைப் பார்த்ததும் சென்னையில்தான். இப்போது என்னுடைய முதல் திரைப்படமும் தமிழ் திரைப்படமாக அமைந்திருப்பது தற்செயலானது என்று தோன்றவில்லை. இதற்குப் பின்னால் ஏதோ ஒரு பூர்வஜென்மத் தொடர்பு இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி.

மதுமிதா ஒரு சிறந்த இயக்குநர். அவர் உருவாக்கிய தர்ஷனா கதாபாத்திரம் என்னுடைய தனிப்பட்ட பயணத்திலும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அந்தக் கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. சக நடிகர்களான அர்ஜுன் தாஸ், சஞ்சனா, ஜாரா, நீரவ், அனுபமா மேடம் உள்ளிட்ட அனைவரும் என்னை ஒரு புதுமுகமாக உணர வைக்காமல், கேமரா முன்னாலும் பின்னாலும் மிகவும் வசதியாக இருக்க உதவினார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரீதா மேடம், ஒளி மற்றும் லென்ஸ் குறித்த நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியதற்கு நன்றி. ‘ஜான் டோ’ படக்குழுவில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞருக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் எனக்கு மிகவும் முக்கியம். நாங்கள் அனைவரும் மிகுந்த உழைப்பைக் கொடுத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ரசித்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

*நடிகை சஞ்சனா நடராஜன் பேசியதாவது:*

‘ஜான் டோ’ படத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினால், அனைவருக்கும் நன்றி சொல்வதிலேயே இந்த நிகழ்ச்சி முடிந்துவிடும். அதனால் அதையெல்லாம் படத்தின் வெற்றிவிழாவில் பார்த்துக்கொள்ளலாம்.

இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருடனும் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம். நடிகையாக மட்டுமின்றி ஒரு மனிதராகவும் இவ்வளவு அற்புதமான குழுவுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. அர்ஜுன் தாஸுடன் நான் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது. அதிலும் இந்தப் படத்தில் நாங்கள் இருவரும் காவல்துறை அதிகாரிகளாக நடித்திருப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. அர்ஜுன் மிகவும் இனிமையானவர், நட்பாகப் பழகக்கூடியவர். படப்பிடிப்புத் தளத்தில் எப்போதும் ஜாலியாகவும் கலகலப்பாகவும் இருப்பார். அவருடன் தீவிரமான காட்சிகளில் நடிப்பதுகூட சில நேரங்களில் சவாலாக இருக்கும். அவருடன் மீண்டும் பணியாற்றியது சிறப்பான அனுபவம். இன்னொரு படத்திலும் அவருடன் இணைந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன்.

இந்தப் படத்திற்காக சுமார் 35 நாட்கள் தொடர்ந்து பணியாற்றினேன். நான் இதுவரை பணியாற்றிய குழுக்களில் மிகவும் திட்டமிட்டும், நேரத்தை வீணாக்காமலும், திறமையாகவும் பணியாற்றிய குழு இதுதான். தினமும் படப்பிடிப்புக்குச் செல்வதே உற்சாகமாக இருக்கும். குறிப்பாக, படக்குழுவில் நிறைய பெண்கள் இருந்தது கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது. அர்ஜுன் சாரை நாங்கள் அனைவரும் படப்பிடிப்பில் அடிக்கடி கலாய்ப்போம். அவரும் அதற்குப் பதிலடி கொடுப்பார். எப்போது யாரைக் கலாய்க்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். இப்படி கலகலப்பான பல நினைவுகள் இந்தப் படப்பிடிப்பில் இருக்கின்றன. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் எனக்கு அளித்த ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி.

‘ஜான் டோ’ ஒரு சிறப்பான சென்டிமென்ட் கலந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம். நான் இன்னும் முழுப் படத்தையும் பார்க்கவில்லை என்றாலும், படத்தின் சில காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். படத்தைப் பார்த்த பலரும் என்னிடம் மிகவும் நன்றாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். நவம்பர் 13ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று படத்தைப் பாருங்கள்.

குடும்பத்துடன் குழந்தைகளையும் அழைத்துச் சென்று ரசிக்கக்கூடிய வகையில் படம் இருக்கும். திரையரங்கிலிருந்து வெளியே வரும்போது ஒரு சிறந்த திரைப்படத்தைப் பார்த்த அனுபவம் உங்களுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறோம். ஊடக நண்பர்களும் ரசிகர்களும் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மேலும் பல நல்ல திரைப்படங்களில் எங்களால் பணியாற்ற முடியும்” என்றார்.

*நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது,*

“முதலில் இந்தப் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருக்கும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் கதையை முதலில் இயக்குநர் மதுமிதா என்னிடம் சொன்னபோது, கதையைப் படித்துப் பாருங்கள் என்றுதான் கூறினார். கதையைப் படித்துவிட்டு நடிக்கச் சம்மதம் தெரிவித்தேன். அதன்பிறகு இப்படத்தை ‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அர்கா நிறுவனத்துடன் பணியாற்றுவது எனக்குப் பெருமையான விஷயம். எங்கள் படத்தின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தில் நடித்த நீரவ் மிகவும் அழகாகவும், இயல்பாகவும் நடித்திருக்கிறார். அவருக்கு இன்னும் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். ஜாராவுக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஸ்ருஷ்டி இந்தப் படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். குறிப்பாக, அவருக்குத் தமிழ் பேசத் தெரியாவிட்டாலும் சிங்க் சவுண்ட் முறையில் படப்பிடிப்பு நடைபெற்றபோது கிடைக்கும் நேரங்களில் வசனங்களைத் தொடர்ந்து பயிற்சி செய்து, ஒரே டேக்கில் சிறப்பாகப் பேசி முடிப்பார். சஞ்சனா இந்தப் படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். பிரீதா மேடம் எங்களுடைய ஒளிப்பதிவாளர். எந்த இடத்திற்குச் சென்றாலும் மிகவும் இயல்பாகப் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார். தயாரிப்பு வடிவமைப்பாளர் அஷ்வினி மேடமும் அவரது குழுவினரும் படப்பிடிப்புத் தளத்தில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு ஃபிரேமையும் சிறப்பாகக் கொண்டுவருவதில் அதிக கவனம் செலுத்தினார்கள். காஸ்ட்யூம் டிசைனர்களான பிரியா ஹரி மற்றும் பிரியா கரண் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே தங்களுக்குள் புரிந்துகொண்டு பணியாற்றுவார்கள். அவர்களுடைய ஒருங்கிணைப்பு மிகவும் ஆச்சரியமானது. அதேபோல் அனு மேடம், அதுல் கிருஷ்ணா, ராஜேஷ், உதவி இயக்குநர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி. படத்தொகுப்பாளர் விஜய் வெங்கடரமணன் அதிகம் பேசமாட்டார். ஆனால், அவருடைய பணி படத்தை மிகச்சிறப்பாக வடிவமைத்திருக்கிறது.

அர்ச்சனா மேடம் இந்தப் படத்தில் என்னுடைய அம்மாவாக நடித்திருக்கிறார். அவருடன் எனக்கு ஒரு சிறப்பான நினைவு இருக்கிறது. ‘கைதி’ படத்திற்காக எனக்குக் கிடைத்த முதல் விருது ஜீ விருது தான். அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது அர்ச்சனா மேடம். அதன்பிறகு அவர் தொகுத்து வழங்கும் விருது விழாக்களில் எனக்கு விருது கிடைப்பது வழக்கமாகிவிட்டது. அதனால் அவரை என்னுடைய அதிர்ஷ்ட தேவதை என்று அழைப்பேன். இந்தப் படத்திலும் மிகவும் அழகாக நடித்திருக்கிறார். இயக்குநர் மதுமிதாவுடன் இது எனக்கு இரண்டாவது படம். ஆரம்பத்தில் அவரை மேடம் என்று அழைத்தாலும், எங்களுடைய நீண்ட பயணத்திற்குப் பிறகு இப்போது மதுமிதா என்று நட்புடன் அழைக்கிறேன். இதற்கு முன்பு ஒரு படத்திற்காக என்னை ஆடிஷனுக்கு அழைத்திருந்தார். அப்போது ஆடிஷன் செய்து அனுப்பினேன். அவர் அதைத் தேர்வு செய்ததாகத் தகவல் வந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது ‘ஜான் டோ’ படத்திற்காக மீண்டும் என்னைத் தொடர்புகொண்டு இந்தக் கதாபாத்திரத்திற்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என்று கூறினார். அவருடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான அனுபவம். மதுமிதா மிகவும் அர்ப்பணிப்புடன், முழுமையாகத் திரைப்படத்தைப்  பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும் இயக்குநர். ஒரு பெண் இயக்குநராக மட்டுமல்லாமல், ஒரு ஒட்டுமொத்த படையையே வழிநடத்தும் ஒருவராகப் பணியாற்றியிருக்கிறார். அவருக்குத் துணையாகத் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களையும் தேர்வு செய்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கு இசையமைத்த முஜீப் மஜீத் மற்றும் பாடகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, என்னுடைய சகோதரி மாளவிகாவும் இந்தப் படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். குடும்பத்தினருக்காகப் பாடல் பாடுவதற்கு அவருடைய குரலைப் பரிசோதித்துப் பார்க்கும்படி மதுமிதாவிடம் கேட்டேன். அவர் ஆடிஷனில் தேர்வானது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. படத்தை வழங்கும் ஏஜிஎஸ் (AGS) நிறுவனம், அர்ச்சனா மேடம், ஐஸ்வர்யா மேடம் மற்றும் அவர்களுடைய குழுவினருக்கும் நன்றி. நெட்ஃபிளிக்ஸ், ஜீ தமிழ், டிவோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஜான் டோ’ ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் மட்டுமல்ல; இதில் வலுவான உணர்வுபூர்வமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் திரில்லராகவும் இருக்கும். நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

*இயக்குநர் மதுமிதா பேசியதாவது,*

“‘ஜான் டோ’ திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட ஆதரவளித்த கார்த்திக் சுப்புராஜ், விஜய் ஆண்டனி, லோகேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், புஷ்கர் – காயத்ரி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ‘பாகுபலி’ படத்தைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம் தமிழில் இப்படத்தைத் தயாரித்திருப்பது எங்களுக்குப் பெருமை. தயாரிப்பாளர்கள் ஷோபு, பிரசாத் மற்றும் அவர்களுடைய குழுவினர் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்தனர். என்னுடைய உதவி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இரவு பகலாக உழைத்திருக்கிறார்கள்.

எந்த ஜானரில் திரைப்படம் உருவாக்கினாலும் மனித உணர்வுகள்தான் என்னுடைய படங்களின் முக்கிய அம்சமாக இருக்கும். ‘ஜான் டோ’ ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர். கேரளா – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள குறிஞ்சி மேடு என்ற மலைப்பிரதேசத்தில் கதை நடைபெறுகிறது. அர்ஜுன் தாஸ் கேரள காவல்துறை அதிகாரியாகவும், சஞ்சனா தமிழ்நாடு காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் எனக்கு ஒரு அக்கா கிடைத்திருக்கிறார் என்றால் அது அர்ச்சனா மேடம்தான். அவர் எனக்குப் படப்பிடிப்புத் தளத்தில் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் வழங்கிய சிவப்பு நிற டெடி பியருக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் சில குறைகள் இருந்தாலும் நான் போதுமா!? என்ற கேள்வி மனதில் அடிக்கடி எழும் , நாம் போதும்!!! என  உணர்த்துவதற்காக தான் அதை வழங்கினோம். ஒரு நல்ல கணவராக, மனைவியாக, குழந்தையாக, நடிகராக அல்லது தொழில்நுட்பக் கலைஞராக இருக்கிறோமா என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அதற்கான பதில், நம்மிடம் குறைகள் இருந்தாலும் நாம் நம்முடைய இடத்தில் சிறந்தவர்கள்தான் என்பதுதான்.

ஒரு இயக்குநருக்கான உண்மையான அங்கீகாரம் பார்வையாளர்களிடமிருந்துதான் கிடைக்கும். நெட்ஃபிளிக்ஸ், ஜீ தமிழ், திவோ மற்றும் ஏஜிஎஸ் போன்ற நிறுவனங்கள் படத்தைப் பார்த்துவிட்டு எங்களுடன் இணைந்திருப்பது மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘ஜான் டோ’ திரைப்படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்” நன்றி என்றார்.

‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ்  (Arka Mediaworks) நிறுவனம் சார்பில் ஷோபு யார்லகட்டா (Shobu Yarlagadda), பிரசாத் தேவினேனி (Prasad Devineni) ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் (Nicholas Chevaillier) இணைந்து படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர். படத்திற்கு பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜீப் மஜீத் இசையமைக்க, ஆர்டிஸ்ட் 404 (Artist 404) கூடுதல் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. படத்தொகுப்பை விஜய் வெங்கடரமணன் கவனித்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளராக அஷ்வினி காலே பணியாற்றியுள்ளார்.

அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அர்கா மீடியாவொர்க்ஸ்  நிறுவனத்தின் தயாரிப்பு, அர்ஜுன் தாஸின் வித்தியாசமான கதாபாத்திரம், மதுமிதாவின் இயக்கம் எனப் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படம் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Comments (0)
Add Comment